எழுவர் விடுதலை தீர்மானத்தில் ஆளுநரின் கருத்து ஏற்புடையதல்ல: துரைமுருகன்

governor tamilnadu perarivalan
By Jon Feb 09, 2021 11:29 AM GMT
Report

ஏழு பேர் விடுதலை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு தான் அதிகாரம் உள்ளது என ஆளுநர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறிய பிறகு குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் உள்ளது என ஆளுநர் கூறுவது ஏற்புடையதல்ல என்று திமுக பொதுச்செயலர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் தேர்தல் சட்ட அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் பொதுசெயலர் துரைமுருகன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இதில், திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறியதாவது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 தமிழர்களின் விடுதலையில் ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையிலும், தமிழக ஆளுநர் தனக்கு அதிகாரமில்லை, குடியரசுத்தலைவருக்குத்தான் அதிகாரம் உள்ளது என கூறுவது ஏற்புடையதல்ல. மாநில அமைச்சரவை, பேரவை உறுப்பினர்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புகிறோம் என்றால், அதனை 99 சதவீதம் நிறைவேற்ற வேண்டியது ஆளுநரின் கடமையாகும்.

ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் மாறுபட்டு செயல்படுகிறார். இது அமைச்சர்களை மதிப்பது போன்றும், மதிக்காததை போன்றும் உள்ளது. தவிர, முதல்வர் ஆளுநரை நேரில் சந்தித்து 7 பேரை விடுதலை செய்ய கோரிக்கை வைத்தபோதும் செய்கிறேன் என கூறி அவரை அனுப்பி விட்டார். ஆனால், அதற்கு முன்பே ஆளுநர் முன் தேதியில் கடிதம் எழுதிவிட்டார் என்பது இப்போதுதான் தெரியவருகிறது.

இந்நிலையில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக நாடமாடுவதாக தமிழக முதல்வர் கூறுகிறார். இதில் யார் நாடகமாடுகிறார்கள் என்பது மக்களுக்கே தெரியும். முதல்வரிடம் உண்மையை மறைத்து பேசும் குணம் ஆளுநருக்கு இருப்பது பாராட்டுக்குரியது அல்ல. உச்சநீதிமன்றம் கூறியபிறகும் நாடகமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் இந்த நாடகத்தின் சூத்திரதாரி யார் என்பது தெரியவேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் இப்படி ஒரு நாடகம் நடக்கிறது என்றால் இதுதொடர்பாக உச்சநீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். குடியரசுத் தலைவர் பல நேரங்களில் மெளனம் காப்பதால்தான் பிரச்னைகளுக்கு பலர் மோசடி வேலைகளை செய்கின்றனர். இப்போது முதல்வர் கொஞ்சம் கலக்கமடைந்துள்ளார். அவர்கள் கட்சியிலே ஒரு மிகப்பெரிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அரசியலில் தெளிவின்றி பேசி வருகிறார்.

தற்போது திமுக மீது குற்றம் சுமத்துகிறார். ஆனால், ஆளுநரே தேவை இல்லை என்பதுதான் திமுகவின் கொள்கையாகும். அந்தந்த மாநில நதிகளை இணைக்க முதலில் திட்டமிட்டது தமிழகம்தான். அதன்படி, காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. இதற்காக திமுக ஆட்சியிலேயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாயனூர் வரை முதல்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

ஆனால், அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டத்தில் எந்த ஒரு கால்வாயும் வெட்டாமல் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டத்துக்கு தற்போது பிரதமரை வைத்து அடிக்கல் நாட்டுகின்றனர். பொதுத்துறை வங்கிகள், ஆயுள் காப்பீட்டு கழகம் தனியார் மயமாக்கபடுவது நாட்டில் ஜனநாயகம் என்பது இல்லை. மன்னராட்சி காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது என்றார்.