முதலையிடம் சிக்கி துடித்த கணவன் - பிரம்புடன் போராடி மீட்ட மனைவி!
கணவனின் காலைக் கவ்விய முதலையை மனைவி அடித்தே விரட்டியுள்ளார்.
சிக்கிய கணவன்
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் பன்னே சிங். இவர் சம்பல் ஆற்றில் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டியிருக்கிறார். முழங்கால் அளவே தண்ணீர் இருந்ததால் குளிப்பதற்காக இறங்கியுள்ளார். அப்போது திடீரென வந்த ஒரு முதலை பின்னாலிருந்து பன்னே சிங்கின் காலைக் கவ்வியது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி விமல் பாய், கணவனைக் காப்பாற்றும் செயலில் சற்றும் யோசிக்காமல் உடனடியாக இறங்கினார். தொடர்ந்து, தன்னுடைய கையிலிருந்த பிரம்பால் முதலையைக் கடுமையாகத் தாக்க அது காலை விட்டுவிட்டது. மீண்டும் முதலை அவரை தண்ணீரில் இழுக்க வந்தபோது,
மீட்ட மனைவி
மனைவி முதலையின் கண்ணில் பிரம்பால் அடித்ததில் பின்வாங்கியுள்ளது. அதனையடுத்து இருவரும் பாதுகாப்பாக அங்கிருந்து வந்துள்ளனர். அதன்பின் காலில் ஏற்பட்ட காயத்தால் அவரை மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பன்னே சிங், ``முதலை தன்னுடைய தாடையால் என்னுடைய காலைப் பிடித்து தண்ணீரில் இழுக்க முயன்றது. அப்போது என்னால் முடித்த அளவுக்கு முதலையின் வயிற்றுப்பகுதியைப் பிடித்துக்கொண்டேன். என்னுடைய மனைவி பிரம்பால் முதலையை தாக்கினார்.
பிறகு அருகிலிருந்த மற்றவர்களும் ஓடிவந்து, முதலையிடமிருந்து என்னைக் காப்பாற்றினர்" எனத் தெரிவித்தார்.