ரூ.20 லட்சம் ரூபாய் நோட்டுகளை கேஸ் தீயில் வைத்து எரித்த தாசில்தார்
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் பர்வத் சிங் என்பவர் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் ரூ.1 லட்சத்தை லஞ்சமாக வாங்கியதாக ஊழல் தடுப்பு அதிகாரிகள் நேற்று முன்தினம் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்துள்ளனர். அதனையடுத்து, அவரிடம் ஊழல் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, அரசு ஒப்பந்தத்தை தருவதற்காக தாசில்தார் கல்பேஷ் குமார் சார்பில்தான் அந்த பணத்தை வாங்கியதாக பர்வத் சிங் வாக்குமூலம் கொடுத்தார். பின்னர், அவரை விட்டுவிட்டு தாசில்தாரை அதிகாரிகள் பிடிக்க தீவிரமாக இறங்கினார்கள். உடனடியாக பிந்த்வாராவிலுள்ள தாசில்தார் கல்பேஷ் குமார் வீட்டுக்கு ஊழல் தடுப்பு அதிகாரிகள் உடனடியாக சென்றார்கள்.
வீட்டுக்கு அருகே ஊழல் தடுப்பு அதிகாரிகள் வருவதை பார்த்ததும் வீட்டின் கதவு, ஜன்னல்களை அடைத்துக்கொண்ட தாசில்தார் தனது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.20 லட்சம் ரூபாய் லஞ்சம் பண நோட்டுகளை கேஸ் ஸ்டவ்வில் வைத்து எரித்திருக்கிறார்.

இருப்பினும், உள்ளூர் போலீஸார் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து அதிகாரிகள் அதிரடியாக உள்ளே சென்றார்கள். அப்போது, அங்கு வீட்டின் சமையல் அறையில் கருகியிருந்த நோட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
அவரிடம் மீதமிருந்த ரூ.1.5 லட்சத்தை பறிமுதல் அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். இதைத் தொடர்ந்து பர்வத் சிங், கல்பேஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.