ராஜஸ்தான் அரசியல் : உட்கட்சி பூசல் திணறும் காங்கிரஸ் தலைமை யாருக்கு?

Rajasthan
By Irumporai Feb 20, 2023 06:28 AM GMT
Report

நாட்டில் ஒருசில மாநிலங்களில் மட்டும்தான் காங்கிரஸ் ஆட்சி இருக்கிறது. அங்கும் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் தலைவிரித்தாடுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்குமிடையே தொடர்ந்து கட்சியில் அதிகாரப்போட்டி நிலவிவருகிறது.

காங்கிரஸ் மோதல் 

இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்துவருகின்றனர். சச்சின் பைலட்டை அடுத்த முதல்வருக்கான வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் முயற்சி எடுத்துவருகிறது. ஆனால், அதற்கு அசோக் கெலாட் இடையூறாக இருந்துவருகிறார். அடுத்த சில மாதங்களில் ராஜஸ்தானில் தேர்தல் நடக்கவிருப்பதால், சச்சின் பைலட் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அதுவும் கட்சித்தலைமையிடம் அனுமதி வாங்காமலேயே இந்தப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் என்கிறார்கள்.

அசோக் கெலாட் முதலமைச்சர்

2018-ல் ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு அமைந்ததிலிருந்தே முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் சச்சினுக்கும் இடையில் பல்வேறு கருத்துவேறுபாடுகள் தொடங்கிவிட்டன. ராஜஸ்தானில் 2013 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பின்னர், அம்மாநிலத்தில் கட்சியைப் பலப்படுத்த சச்சினைத்தான் முன்னிறுத்தினார் ராகுல் காந்தி.

2018 தேர்தலில் காங்கிரஸின் வெற்றிக்கு சச்சினின் கடும் உழைப்பு முக்கியக் காரணியாக அமைந்தது. அதன் பலனாகத் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால், பல்வேறு காரணங்களால் அசோக் கெலாட்டையே முதல்வராக்கியது காங்கிரஸ் தலைமை. இந்த நிலையில் அசோக் கெலாட் பதவியேற்ற முதலே பல பரபரப்பை ஏற்படுத்தினார்.

ராஜஸ்தான் அரசியல் : உட்கட்சி பூசல் திணறும் காங்கிரஸ் தலைமை யாருக்கு? | Rajasthan Politics In Tamil

ராஜஸ்தான் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 24-ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத் தொடரில் 2023-24-ம் ஆண்டுக்கான மாநில அரசின் பட்ஜெட் பிப்ரவரி 10-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தானில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

மாறிய பட்ஜெட் உரை 

இந்த நிலையில் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். ஆனால் அவர் தவறுதலாக இந்த ஆண்டு பட்ஜெட் உரைக்கு பதிலாக பழைய பட்ஜெட் உரையை வாசித்துக் கொண்டிருந்தார்.

8 – 10 நிமிடங்கள் வரை, தாம் பழைய பட்ஜெட்டை வாசிக்கிறோம் என்பதை முதல்வர் அசோக் கெலாட் உணரவில்லை. இந்நிலையில் அவையில் அதிகாரிகள், கேலரியில் இருந்த நிதித் துறை அதிகாரிகள் இந்தக் குளறுபடி குறித்து தலைமை கொறடா மகேஷ் ஜோஷியிடம் கூற, அவர் இதுபற்றி முதல்வரிடம் எடுத்துக் கூறினார். உடனே உரை வாசிப்பதை அசோக் கெலாட் நிறுத்தினார்.

ராஜஸ்தான் அரசியல் : உட்கட்சி பூசல் திணறும் காங்கிரஸ் தலைமை யாருக்கு? | Rajasthan Politics In Tamil

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடுவதாகப் பெயர் அடிப்பட்டபோது, சச்சின் பைலட் ராஜஸ்தானின் முதல்வராகப் போகிறார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அசோக் கெலாட், அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

இதற்கிடையில், அசோக் கெலாட்டின் ஆதரவாளர்கள் தனியாகக் கூட்டம் நடத்தினர். இதனால் காங்கிரஸ் மேலிடம் நடத்தவிருந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறாமல் போனது.

சச்சின் பைலட் கேள்வி

இந்த விவகாரத்தில் அசோக் கெலாட்டின் ஆதரவாளர்களுக்கு கட்சி மேலிடத்திலிருந்து ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பிறகு, அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் மாறி மாறி மேடைகளில் மறைமுகமாக விமர்சித்துக்கொண்டனர். ஆனால், பொதுவெளியில் வெளிப்படையாகத் தங்களுக்குள் பிரச்னை ஒன்றுமில்லை என அசோக் கெலாட் கூறினார். இந்த நிலையில், நோட்டீஸ் அனுப்பப்பட்ட அசோக் கெலாட் ஆதரவாளர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏன் என சச்சின் பைலட் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக ஊடகத்திடம் பேசிய சச்சின் பைலட், ``கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி, ஜெய்ப்பூரில் கட்சிக் கூட்டம் நடத்த முதல்வர் அசோக் கெலாட் அழைப்புவிடுத்தார். ஆனால், அது நடைபெறவில்லை. அப்போது கட்சி மேலிடப் பார்வையாளர்கள் அஜய் மாக்கன், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இருந்தனர். கூட்டம் நடத்தப்பட்டிருந்தால் அதில் என்ன நடந்திருக்கும் என்பது ஒரு தனிப் பிரச்னை. அது உடன்பாடாகவோ அல்லது கருத்து வேறுபாடாகவோ இருக்கலாம். ஆனால், அன்று கூட்டம் நடைபெறவில்லை.

இந்தக் கூட்டம் நடைபெறாமல் போனதற்கும், தனியாக வேறு கூட்டம் நடத்தியதற்கும் காரணமானவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸ்களுக்கு அவர்கள் பதிலளித்ததாக ஊடகங்கள் மூலம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

ராஜஸ்தான் அரசியல் : உட்கட்சி பூசல் திணறும் காங்கிரஸ் தலைமை யாருக்கு? | Rajasthan Politics In Tamil

இருப்பினும், இதுவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் எந்த முடிவோ, நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. இதில் நடவடிக்கை எடுப்பதில் ஏன் தாமதம் என்பதற்கு, ஏ.கே.ஆண்டனி, மல்லிகார்ஜுன கார்கே தலைமையின்கீழ் உள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழுவும், தலைமையுமே சிறந்த பதிலளிக்க முடியும் என்று நான் நினைக்கிறன்" என்றார்.

இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிக்கும் நிலையில், காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் அரங்கேறுவது தேர்தலை எதிர்கொள்வதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆளுமையில் உள்ள நிலையில் அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்க்கும் உள்ள கோஷ்டி மோதல் தற்போது வரை தொடர்கின்றது.