18 வயதுக்கு மேற்பட்டோர் சேர்ந்து வாழலாம்; லிவ்-இன் உறவுக்குத் தடையில்லை - உயர்நீதிமன்றம்
18 வயதுக்கு மேற்பட்டோர் சேர்ந்து வாழலாம் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லிவ்-இன்
ராஜஸ்தானை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும், 19 வயது இளைஞரும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்துடன் லிவ்-இன் முறையில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் இந்த உறவுக்கு இருதரப்புப் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மிரட்டல்களும் விடுத்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி,
இந்த லிவ்-இன் ஜோடி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையில், இளைஞருக்குச் சட்டப்பூர்வத் திருமண வயதான 21 வயது இன்னும் ஆகவில்லை என்பதால், அவர் லிவ்-இன் முறையில் சேர்ந்து வாழ முடியாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
நீதிமன்ற தீர்ப்பு
ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிபதி, "சட்டப்பூர்வத் திருமண வயது என்பது ஒருவரின் தனியுரிமையைப் பறிக்காது. இந்தியாவில் லிவ்-இன் உறவுமுறை என்பது சட்டவிரோதமோ அல்லது குற்றச்செயலோ அல்ல. வயது வந்தோரின் வாழ்வுரிமையைச் சட்டப்பிரிவு 21 பாதுகாக்கிறது.

வாழும் இடத்தையும், வாழ்க்கைத் துணையையும் தேர்வு செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. 18 வயதைக் கடந்த இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தால், அவர்களின் முடிவில் அரசு தலையிட முடியாது" என்று உத்தரவிட்டார்.
மேலும், மனுதாரர்களுக்கு ஆபத்து இருக்கும் பட்சத்தில், உடனடியாக அவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.