ஆழ்வார்பேட்டை To அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி - யார் இந்த ராஜராஜேஸ்வரி?
தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறி அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற ராஜராஜேஸ்வரி.
ராஜராஜேஸ்வரி
தமிழ்நாடு, சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் பிறந்து வளர்ந்தவர் ராஜராஜேஸ்வரி. இவரின் தயார் பத்மா ராமநாதன் ஒரு நடன கலைஞர் மற்றும் ஆசிரியர் ஆவார். தந்தை மேலாளராக ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்தார். ராஜேஸ்வரி தனது 16 வயதில் அமெரிக்காவில் குடியேறினார்.
நியூயார்க்கில் ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர், அங்கேயே நிலையாக வசிக்க வாய்ப்புகள் ஏற்பட்டது. பின்னர் ராஜேஸ்வரி புரூக்லின் சட்டப் பள்ளியில் சட்டம் படித்து வழக்கறிஞரானார். பின்னர் 16 வருடங்களாக ரிச்மாண்ட் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். வழக்கறிஞராக இருந்தபோது குழந்தைகள் உரிமை, குடும்ப வன்முறை வழக்குகளில் திறமையாக செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத்தந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ராஜ ராஜேஸ்வரியை நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ரிச்மாண்ட் கவுண்டி மேயரான பில் டி பிளாசியோ பரிந்துரை செய்தார். அதன்படி கடந்த 2015ம் ஆண்டு நியூயார்க் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக ராஜேஸ்வரி தனது 43 வயதில் பொறுப்பேற்றார்.
இதன்மூலம் அப்பதவியை வகித்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். குழந்தைகள் பாலியல் வன்செயல்களில் ஈடுபட்டு குற்றம் செய்த கார்லோஸ் ரொசாரியோ வழக்கில் தீர்ப்பு வழங்கியதில் ராஜராஜேஸ்வரிக்கு புகழ் கிடைத்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி
பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார் ராஜேஸ்வரி. கடந்த 2022ஆம் ஆண்டு, குற்றவியல் நீதிமன்ற சமநீதிக் குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுகுறித்து ராஜராஜேஸ்வரி பேசுகையில் "இது கனவு போல தோன்றுகிறது.
நான் நினைத்ததை விட, மிக அதிகமான பதவி கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்த எனக்கு, இப்பதவியை தந்ததற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என பேசியுள்ளார்.
சட்டத் துறையில் மட்டுமல்லாமல், அமெரிக்காவில் நடைபெறும் இந்திய கலாச்சார நிகழ்வுகள், ஆலய திருவிழாக்களில் பங்கேற்கும் ராஜராஜேஸ்வரி பாரத நாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனங்களையும் அரங்கேற்றியுள்ளார்.
தனது தாயார் பத்மா ராமநாதன் பெயரில் பத்மாலயா டான்ஸ் அகாடமியும் நடத்தி வருகிறார். தொடர்ந்து சமூக நீதிக்காகப் போராடி வருகிறார் ராஜராஜேஸ்வரி.