தேர்தல் பிரசாரத்தில் மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளித்தெளித்த விவி ராஜன் செல்லப்பா
திருப்பரங்குன்றத்தில் கண்டிப்பாக மயில்களுக்குத் தனியாக சரணாலயம் அமைக்கப்படும் என திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் விவி ராஜன் செல்லப்பா வாக்குறுதியளித்துள்ளார். திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் வி.வி. ராஜன்செல்லப்பா பாலாஜி நகர், ஹார்விப்பட்டி பகுதியில் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவரை பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர். அப்போது மக்களிடையே பேசுகையில், திருப்பரங்குன்றத்தில் கண்டிப்பாக மயில்களுக்குத் தனியாக சரணாலயம் அமைக்கப்படும். மத்திய அரசுடன் போராடியாவது மூன்று ஆண்டுகளில் கண்டிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனையை முடித்துக் காட்டுவேன், மதுரை விமான நிலையத்தை விரிவுபடுத்துவேன் என அடுக்கடுக்காக வாக்குறுதிகளை வழங்கினார்.
மேலும் தொடர்ந்து இரட்டை இலைக்கு வாக்களியுங்கள், உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் எனவும் உறுதியளித்தார்.