ஆமை வேகத்தில் நடக்கும் மழை நீர் வடிகால் பணிகள் - தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்..! நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?
ஆழ்வார் திருநகர் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
பரபரப்பாக காணப்படும் சென்னை
சென்னை மாவட்டம் என்பது நாள் தோறும் பரபரப்பாக காணப்படும் ஒரு மாவட்டம். இங்கு சுமார் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
சென்னையை பொறுத்த வரை மக்கள் தொகை பெருக்கம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் தலைநகரமாக இருந்து வரும் சென்னைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர்.
மிகப் பெரிய ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். மக்கள் தொகை பெருக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசல் என்பது தினம் தினம் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போன்று சென்னை ஆண்டு தோறும் மழை வெள்ளத்தில் சிக்கி கடும் இன்னலுக்கு மக்களை உள்ளாக்கி வந்தது.
களத்தில் இறங்கிய முதலமைச்சர்
இதை தொடர்ந்து கடந்த 2021 ஆண்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அரியணையில் அமர்ந்தது.
புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு சவால்களை சந்தித்தது. அந்த சவால்களில் முக்கியமானதாக கருதப்பட்டது உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்திய வந்த கொரோனா நோய் பரவல் தான்.
இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று தமிழகத்திலும் பெரும் இன்னல்களை ஏற்படுத்தியது.
ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல துரித நடவடிக்கைகளை எடுத்து கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இதை தொடர்ந்து சென்னையில் பெய்த கனமழை கடும் வெள்ளத்தை ஏற்படுத்தியது. இதயடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி வரும் காலங்களில் மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வடிநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் சென்னை முழுவதும் மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து 90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் அண்மையில் பெய்த மழையால் பாதிப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில் பலரும் அரசை பாராட்டி சமூக வலைத்தளத்தில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகள்
இதனிடையே சென்னை விருகம்பாக்கம் அடுத்த ஆழ்வார் திருநகர், வீரப்பா நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை நீர் வடிகால் அமைக்கும் பணி என்பது நடைபெற்று வருகிறது.
மக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த சாலையில் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள குழிகளில் கழிவு நீர் தேங்கியுள்ளதால் நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நோய் தொற்று ஏற்படும் அபாயம்
மேலும் காலை நேரங்களில் தேங்கி நிற்கும் கழிவு நீர்களை ஊழியர்கள் சாலைகளில் ராட்சத மோட்டர் பம்ப் மூலம் எடுத்து வெளியேற்றுவதால் மக்கள் துர்நாற்றத்தால் மூக்கை முடிக்கொண்டு செல்கின்றனர்.
குடியிருப்புகள் அதிகம் உள்ள இந்த பகுதியில் கொசு தொல்லையும் தினம் தோறும் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.
மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டும் மக்கள் உடனடியாக பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி அதிகாரிகளும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.