காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் - வானிலை மையம்

Heavy Rain Meteorological Centre
By Thahir Nov 01, 2021 01:20 PM GMT
Report

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னையிலும் பல இடங்களில் கனமழையும் பல்வேறு இடங்களில் லேசான மழையும் பெய்து வருவதால், குளிச்சியான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாது,

குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நகரக் கூடும்.

அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும்.

இதன் காரணமாக 01.11.2021: (ஆரஞ்சு எச்சரிக்கை) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,

அதுவே நாளை (நவம்பர் 2) டெல்டா மாவட்டங்கள், கடலூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,

கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அதற்கு அடுத்த நாள் (நவ.3) மதுரை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

பின்னர் தீபாவளியன்று அதாவது நபம்பர் 4ஆம் தேதி, வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்