3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை - 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
15 மாவட்டங்களில் மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இன்று கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், சென்னையில் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
மாலை 3 மணியளவில் சென்னையில் கரு மேகங்கள் சூழ்ந்து, பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய துவங்கியுள்ளது.
இதனையடுத்து, அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நீலகிரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 15 மாவட்டங்களில் காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலெர்ட்
திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தியெடுத்த நிலையில், மழை பெய்ய துவங்கியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.