சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்கப் போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது தமிழகத்தில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் மீண்டும் கனமழை
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது.
இதனையடுத்து, சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம், சாந்தோம், மெரினா, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த கன மழை பெய்து வருகிறது.
சென்னையில் பெய்து வரும் மழையால் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் வெள்ள நீரில் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி நிற்கிறது. சாலைகள் படுமோசமாக உள்ளதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.