இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
இந்நிலையில், தமிழகத்தின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும்,தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதே சமயம், காரைக்கால், புதுச்சேரியிலும் இன்று ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்றும், நாளையும் மன்னார் வளைகுடா மற்றும் குமரி பகுதியில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.