தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 8ம் தேதி புயலாக உருவெடுத்தது. இதற்கு ‘அசானி’ என்று பெயர் வைக்கப்பட்டது.
இந்தப் புயல் வடக்கு ஆந்திரம் ஒடிசா கடற்கரையை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகா்ந்து, ஆந்திர கடல் பகுதியில் நிலைகொண்டது.
இதனால் ஆந்திர மாநில வட கடலோர மாவட்டங்களில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்ந்தது. அசானி புயல் காரணமாக ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநில கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.
ஆந்திரத்தின் கடலோர மாவட்டங்களான ஸ்ரீகாகுளம், பபாத்லா, ஓங்கோல் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த அசானி புயல் காரணமாக ஆந்திரா முழுவதும் பெய்த பலத்த மழையால் 1000 ஏக்கர் பயிர்கள் நாசமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் -
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
மேலும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.