புரட்டியெடுத்த குலாப் புயல் கரையைக் கடந்தது!

rain-kulap-puyal-tamilnadu
By Nandhini Sep 27, 2021 02:49 AM GMT
Report

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நேற்று கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த குலாப் புயல் மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரை விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி குலாப் புயல் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டிய பகுதிகளான விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தபோது பலத்த காற்று வீசியது. குலாப் புயல் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஆந்திராவைச் சேர்ந்த 2 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார்.

மேலும் கோராபுட், ராயகடா மற்றும் கஜபதி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது மற்றும் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 70 கிமீ வேகத்தில் இருக்கும் என்று வானிலை ஆய்வு இயக்குனர் எச்ஆர் பிஸ்வாஸ், புவனேஸ்வர் தெரிவித்துள்ளார். குலாப் புயல் காரணமாக ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் குலாப் புயல் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று முதல் 29ம் தேதி வரை தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இன்று முதல் மீனவர்கள் யாரும் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தி இருக்கிறது. 

புரட்டியெடுத்த குலாப் புயல் கரையைக் கடந்தது! | Rain Kulap Puyal Tamilnadu