வங்கக்கடலில் உருவானது ‘குலாப்’ புயல் - தமிழகத்தில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்க கடலில் உருவான குலாப் புயல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -
வங்க கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருந்தது. அது மேலும் புயல் சின்னமாக வலுவடைந்துள்ளது.
இந்த புயலுக்கு குலாப் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது உருவாகி உள்ள இந்த புயலுக்கு பாகிஸ்தான் பெயர் சூட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த புயல் மேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டிய விசாகப்பட்டினம்-கோபால்பூருக்கு இடையே கடக்கக்கூடும்.
இதன் காரணமாகவும், தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து, இன்று தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
குலாப் புயல் காரணமாக சென்னை துறைமுகத்தில் 2ம் எண் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் 1ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதேபோல் பாம்பன், நாகப்பட்டினத்திலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. ‘
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.