தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை நீடிக்கும் -வானிலை ஆய்வு மையம்!
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை
தமிழ்நாட்டில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கணித்துள்ள நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன், வடக்கு உள்கர்நாடகா முதல் தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறினார்.
அதே சமயம், வரும் 26 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.