நெருங்குகிறது ‘அசானி’ புயல் - புரட்டிப்போடப்போகும் கனமழை - தேசிய பேரிடர் மீட்புப் படைகள் நடவடிக்கை தீவிரம்

asani cyclone
By Nandhini May 11, 2022 06:09 AM GMT
Report

தமிழகத்தில் அசானி புயலால் 33 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது.

இதனிடையே ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி பகுதியில் இருந்து 590 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள புயல் நேற்று இரவு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா கடற்கரையையொட்டி மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவை அடைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு -

அசானி புயல் இன்று பிற்பகலுக்குள் காக்கிநாடா - விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி நகர உள்ளது. அப்போது, ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு 95 கி.மீ. வேகம் வரையிலும், ஒடிசா கடலோர பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரையிலும் பலத்த காற்று வீச உள்ளது.

மேற்கு வங்காளத்தின் தென்பகுதியிலும் கனமழை கொட்டி தீர்க்கும்.

இவ்வாறு வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ‘அசானி’ புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று ஆய்வு செய்துள்ளார்.

மீட்பு பணிகளை மேற்கொள்ள ஆந்திராவில் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 9 குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. மேலும், 7 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஒடிசாவில் 17 குழுக்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேற்கு வங்காளத்தில் 17 குழுக்கள் தயார்நிலையில் உள்ளன.

அசானி புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக ஆரணி, போளூர் பகுதிகளை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. போளூர், வசூர், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் மின்சாரக் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால், பல்வேறு கிராமங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது.

அசானி புயல் காரணமாக சென்னை மெரீனா கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மக்கள் யாரும் கடலுக்குள் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.