வங்கக்கடலில் உருவானது அசானி புயல் - வெளுத்து வாங்கும் கனமழை - மக்களுக்கு எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அசானி புயல் உருவாகியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு -
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று காலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும் இது இன்று புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 10ம் தேதி அன்று மாலை வட ஆந்திரா - ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும்.
இந்நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் ‘அசானி’ புயல் மேலும் வலுப்பெற்று ஆந்திரா - ஒடிசா கரையை நோக்கி நகர உள்ளது. வரும் 10ம் தேதி ஆந்திரா - ஒடிசா இடையே கரையை கடக்கும் நிலையில் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
