ரயில்வே ஊழியர் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான பணம்,நகைகள் கொள்ளை
சித்தேரிமேடு பகுதியில், ரயில்வே ஊழியரின் வீட்டின் கதவை உடைத்து, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிச்சத்திரம் அடுத்த, சித்தேரிமேடு கிராமத்தில், பஜனை கோவில் தெருவில் வசிப்பவர் துரையரசன், 38; ரயில்வேயில் சிக்னல் டெக்னீசியனாக பணியாற்றி வருகிறார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பணி முடிந்து, இரவில் வீட்டுக்கு வந்து, மனைவி, மகனுடன் ஓர் அறையில் துாங்கியுள்ளார். நேற்று முன்தினம் காலை, துாங்கி எழுந்தபோது, வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
உள்ளே, மற்றொரு அறையில் பீரோவில் இருந்த, 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 60 சவரன் தங்க நகைகளை, மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், கள்ள சாவியை பயன்படுத்தி, பீரோவை திறந்து கொள்ளையடித்தது தெரிந்தது. தகவலறிந்த பாலுசெட்டிச்சத்திரம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, தடயவியல் நிபுணர்களை வைத்து கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர்.
கொள்ளை நடந்த வீட்டில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க, இரண்டு தனிப்படை போலீசாரை, மாவட்ட எஸ்.பி., சண்முகப்ரியா நியமித்துள்ளார்.