மதுரை ரயில் திட்டத்தை வேண்டாம் என தமிழக அரசு கூறியதா? - ரயில்வே அமைச்சர் விளக்கம்
மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.
மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கடந்த 10 ஆம் தேதி சென்னை வந்து ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் அம்ரித் பாரத் 2 - படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை ஆய்வு செய்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "மதுரை - தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் வேண்டாம் என தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக கடிதம் அனுப்பியதால் மத்திய அரசு இந்த திட்டத்தை முழுமையாக கைவிட்டது" என கூறினார்.
அடிப்படை ஆதாரமற்றது
இந்த பேச்சு தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்தார். தமிழக அரசு சார்பாக திட்டம் கைவிடும்படி கோரப்பட்டதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.
இந்த திட்டத்திற்காக நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவே வலியுறுத்தி வந்தோம். உரிய நிதியை ஒதுக்கி உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என கூறினார்.
அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்
இந்த நிலையில் மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டம் தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். இதில், சென்னை ICF-ல் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது தொழிற்சாலையில் அதிக இரைச்சல் இருந்ததால் செய்தியாளரின் கேள்வி தெளிவாக கேட்கவில்லை. 'தூத்துக்குடி' குறித்து கேட்கப்பட்ட கேள்வியை 'தனுஷ்கோடி' என புரிந்துகொண்டு நான் பதிலளித்தேன்.
தனுஷ்கோடி ரயில்பாதை திட்டத்தையே சுற்றுச்சூழல், நிலப்பிரச்னை காரணமாக கைவிடுமாறு தமிழ்நாடு அரசு கோரியிருந்தது. இது தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பமே தவிர, மதுரை - தூத்துக்குடி திட்டத்தில் எந்த குழப்பமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.