ரயிலில் இனி கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்ல கட்டணம் - எத்தனை கிலோ வரை இலவசம்?
ரயிலில் நிர்ணயிக்கப்பட்ட லக்கேஜ் அளவை விட கூடுதலாக கொண்டு சென்றால் அபராதம் விதிக்க உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில் பயணம்
ரயில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் தொலைதூர பயணம் செய்வதாக இருந்தால் மக்கள் ரயில் பயணத்தையே விரும்புவார்கள்.
தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால், பலரும் தொடர் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
இந்நிலையில், பயணத்தின் போது சிலர் கூடுதல் லக்கேஜ் கொண்டு வருவதாகவும், இதனால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்துள்ளது.
லக்கேஜ் அளவு
இந்நிலையில், கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளுக்கு அபராதம் விதிக்க உள்ளதாக தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதன்படி, ஏசி முதல் வகுப்பு பயணிகள் 70 கிலோ வரையும், ஏசி 2-ம் வகுப்பு பயணிகள் 50 கிலோ வரையும், ஏசி 3-ம் வகுப்பு பயணிகள் 40 கிலோ வரையும் லக்கேஜ் எடுத்து செல்லலாம்.
அதே போல், முன்பதிவு செய்யப்பட்ட படுக்கை பெட்டிகளில் பயணிப்பவர்கள் 40 கிலோ வரையும், 2ஆம் வகுப்பு பெட்டிகளில் பயணிப்பவர்கள் 35 கிலோ வரையும் லக்கேஜ் கொண்டு செல்லலாம். இந்த அளவிலான லக்கேஜ்களை பயணிகள் இலவசமாக ரயில்களில் எடுத்துச் செல்லலாம்.
அதேவேளையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக 10 முதல் 15 கிலோ வரை கொண்டு செல்பவர்கள் 1.5 மடங்கு லக்கேஜ் கட்டணம் செலுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது.