ரயிலில் மிடில் பெர்த்தில் பயணிக்கிறீங்களா? ரயில்வே முக்கிய அறிவிப்பு
ரயில் மிடில் பெர்த் குறித்த அறிவுரையை ரயில்வே வழங்கியுள்ளது.
மிடில் பெர்த்
சென்னை-பாலக்காடு விரைவு ரயிலில் மிடில் பெர்த் சரிந்து விழுந்ததில் கீழ் பெர்த்தில் படுத்திருந்த சூர்யா என்ற பெண் காயமடைந்தார்.
தொடர்ந்து முதல் உதவி சிகிச்சை கூட செய்யாமல் பாளையம் முதல் சேலம் வரை சுமார் 2 மணி நேரமாக தலையில் கை வைத்துப் படியே அந்த பெண் பயணித்துள்ளார். மேலும் ரயிலில் முதலுதவிப்பெட்டிக்கூட இல்லையென குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தெற்கு ரயில்வே, சம்பவம் நடந்த நேரத்தில், நடு பெர்த்தில் ஆட்கள் இல்லை. ரயில் ஜோலார்பேட்டை நிலையத்தை கடந்த பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்தது. அந்த இடத்தில் அருகிலுள்ள ரயில் நிலையம் மொரப்பூர். தகவல் கிடைத்ததும், வணிக மற்றும் மருத்துவக் கட்டுப்பாடுகளால் உடனடியாக மருத்துவ உதவி ஏற்பாடு செய்யப்பட்டது.
ரயில்வே விளக்கம்
இருப்பினும், மருத்துவ உதவி பெறுவதற்காக மொரப்பூரில் ரயிலில் இருந்து இறங்க அந்தப் பயணி மறுத்துவிட்டார். பின்னர் சேலம் ரயில் நிலையத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆய்வில், ரயில் பெட்டியின் சங்கிலி போல்ட் இறுக்கமான நிலையில் இருப்பதும், நடுத்தர ரயில் பெட்டி 2.5 செ.மீ.க்கு மேல் உயர்த்தப்பட்டபோது மட்டுமே கொக்கி விடுபட்டதும் கண்டறியப்பட்டது.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் சங்கிலி இணைப்பு கொக்கியைப் பயன்படுத்தி நடு பெர்த் சரியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளதா ?என்பதை பயணிகள் உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முறையற்ற கையாளுதல் அல்லது பெர்த்தை சரியாகப் பூட்டத் தவறியது சக பயணிகளுக்கு பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும்.
எனவே அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை உறுதி செய்ய, இந்தப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதில் உங்கள் ஒத்துழைப்பு அவசியம் என தெரிவித்துள்ளது.