மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை - முக்கிய தகவல்
மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை மீண்டும் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்டண சலுகை
ரயில் பயணத்தில் 58 வயது நிரம்பிய பெண்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையும், 60 வயது நிரம்பிய ஆண்களுக்கு 40 சதவீதம் கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வந்தது. 2020ல் கொரோனா காரணமாக இந்த சேவை நிறுத்தப்பட்டது.
மேலும், சலுகையை மீண்டும் வழங்க கோரிக்கை எழுந்தபோது இந்த கட்டண சலுகையால் ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1,667 கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படாது என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று ரயில் பயணிகள், மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து தட்சிண ரயில்வே பென்ஷனர் சங்கத் தலைவர் இளங்கோவன் கூறுகையில்,
தொடர் கோரிக்கை
ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் 6 கோடி பேரும், முன்பதிவில்லாத பெட்டிகளில் 6 கோடி பேரும் இந்த சலுகையை பெற்றுவந்தனர். கரோனாவுக்குபிறகு நிறுத்தப்பட்ட இந்த சலுகை தற்போது வரை வழங்கப்பட வில்லை. இதற்காக, ரூ.1,667 கோடி செலவு ஏற்படுவதாக ரயில்வே வாரியம் கூறுகிறது.
12 கோடி மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணத்தில் சலுகை கட்டணம் கொடுக்கக்கூடாதா, மூத்த குடிமக்கள் பெரும்பாலும் மருத்துவ சிகிச்சைக்காகவும், ஆன்மிக சுற்றுலாவுக்காகவும் வெளியூர் சென்று வருகின்றனர். எனவே, இந்த கட்டண சலுகையை பெரிய சுமையாக கருதாமல், மீண்டும் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கட்டண சலுகை தொடர்பாக ரயில்வே அமைச்சகம்தான் முடிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.