முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு - லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி - நடந்தது என்ன?

raid former minister K.P.Anbalagan case record
By Nandhini Jan 20, 2022 03:34 AM GMT
Report

வருமானத்தை விட கூடுதலாக ரூ. 11.32 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய வீடு உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக, 2016- 2021ம் ஆண்டு வரை பதவியிலிருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டதாகவும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில்,சோதனை நடத்தி வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கே.பி.அன்பழகன் மற்றும் அவரது மனைவி மல்லிகா ,மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்துள்ளதாக கூறி, அவர்கள் 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதனையடுத்து, சென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட 57 இடங்களில் 200-க்கும் அதிகமான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். குறிப்பாக தருமபுரியில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, அதிமுக முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி,எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோர் அதிரடி சோதனையில் சிக்கினர்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையில் சிக்கிய 6வது அமைச்சர் கே.பி.அன்பழகன் என்பதும், அவர் தற்போது பாலக்கோடு எம்.எல்.ஏ. ஆக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.