முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு...கொந்தளிக்கும் முக்கிய புள்ளிகள் - காரணம் என்ன?

M K Stalin ADMK AIADMK Edappadi K. Palaniswami
By Thahir Sep 13, 2022 07:29 AM GMT
Report

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்த பின் முதல் சோதனை 

அதிமுக ஆட்சியின் போது அமைச்சர்களாக இருந்தவர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர்,  சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் வீடுகளில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கடந்த ஆண்டு முன்னாள் சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,  கோவை,  திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர்.

முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு...கொந்தளிக்கும் முக்கிய புள்ளிகள் - காரணம் என்ன? | Raid At Places Related To Former Aiadmk Ministers

லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் 2016 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை வருமானத்திற்கு அதிகமாக சி.விஜயபாஸ்கர் 51 கோடியே 35 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை சேர்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் அவரது மனைவி ரம்யாவும் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சம் மதிப்பிலான சொத்துகளை குவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மீண்டும் சோதனை 

இந்த நிலையில் இன்று காலை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மருத்துவ கல்லுாரி தொடங்குவதற்கு தகுதியானது என்று தேசிய மருத்துவ குழுமத்தின் விதிமுறைகளுக்கு முரணாக மருத்துவமனைக்கு சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சென்னை, சேலம், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளுர், தாம்பரம் ஆகிய நகரங்களில் உள்ள 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ கல்லுாரி தொடங்க தகுதி உள்ளது என விதிகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை பேராசிரியர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் முன்னாள் ஊரக உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவினர், போலீசார் இடையே தள்ளு முள்ளு 

இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றுவதற்காக சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 26 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு...கொந்தளிக்கும் முக்கிய புள்ளிகள் - காரணம் என்ன? | Raid At Places Related To Former Aiadmk Ministers

ஒரே நேரத்தில் முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்புள்ள 39 இடங்களில் 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு திரண்ட ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவர்களை குண்டு கட்டாக துாக்கிச் சென்ற போலீசார் கைது செய்தனர்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம் 

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து,

ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் 7பேரையும், கழக தொண்டர்களையும், சர்வாதிகார போக்குடன் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிப்பதுடன், கைது செய்யப்பட்டுள்ள அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிபுத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக தொண்டர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் மின்சார கட்டண உயர்வை மறைப்பதற்காகவே இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.