நாட்டின் செல்வத்தின் அதிகாரம் முஸ்லீம்களுக்குத்தான் - மோடி பேச்சுக்கு ராகுல் கடும் தாக்கு!
முஸ்லீம்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது.
மோடி பேச்சு
இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதில் பேசிய அவர், நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். அப்படியானால் யாரிடம் இருந்து செல்வத்தை வாங்கி அதை யாருக்குப் பிரித்துத் தருவார்கள்.
கஷ்டப்பட்டுச் சம்பாதித்த செல்வத்தை இப்படி இழக்கப் போகிறீர்களா? இதுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தான் இப்படி இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் அதிகாரம் எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளது.
சாடிய ராகுல்
இந்த பேச்சு வைரலான நிலையில், தேர்தல் வாக்குறுதியில் எந்த இடத்திலும் அதுபோல காங்கிரஸ் சொல்லவில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,
"முதல் கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோடியின் பொய்களின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. பயத்தின் காரணமாக, அவர் இப்போது பொதுமக்களின் கவனத்தைப் பிரச்சினைகளில் இருந்து திசை திருப்ப விரும்புகிறார்.
காங்கிரஸின் புரட்சிகர தேர்தல் அறிக்கைக்கு இப்போது நாடு ஆதரவு வரத் தொடங்கிவிட்டது. இந்த நாடு அதன் பிரச்சினைகளில் வாக்களிக்கும்.. அதன் வேலைவாய்ப்பு, அதன் குடும்பம் மற்றும் அதன் எதிர்காலத்திற்காக வாக்களிக்கும்" என்று சாடியுள்ளார்.