காப்பாற்றக் கூறும் பெண்கள்; நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் பற்றி பாஜகவினர் பேசுவதில்லை என்று எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி
ராஜஸ்தானின் பிகானீர் நகரில் காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர் "வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை கொண்டு வாருங்கள். இளைஞர்களுக்கு வேலை கொடுங்கள்.
பணவீக்கத்திலிருந்து காப்பாற்றுங்கள் என பெண்கள் கூறுகிறார்கள். ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய வரலாற்றில் முதல்முறையாக விவசாயிகள் வரி செலுத்துகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் பற்றி பா.ஜ.க.வினர் பேசுவதில்லை.
தேர்தல் பத்திரங்கள்
மக்களின் கவனத்தை திசை திருப்புவதே அவர்களின் வேலை. 20 தொழிலதிபர்களின் கடன்களை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். ஒருபுறம் பெரிய தொழிலதிபர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. பணம் பெற்றுள்ளது.
மறுபுறம் காங்கிரசின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த தேர்தல் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றும் தேர்தல். நாட்டின் உண்மையான பிரச்சனைகளான வேலையின்மை, பணவீக்கம் பற்றி ஊடகங்கள் மக்களுக்கு சொல்லாது" என்று தெரிவித்துள்ளார்.