ராகுலை விடாது துரத்தும் ட்விட்டர் : போக்சோவில் நடவடிக்கை எடுக்க சொன்ன வழக்கு ஒத்திவைப்பு

twitter rahulgndhi
By Irumporai Aug 27, 2021 10:52 AM GMT
Report

டெல்லியில் பாலியல் சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலத்தைப் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி சமூக விரோதிகளால் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக டெல்லி போலீஸார் 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று ஆறுதல் கூறினார். கொலை செய்யப்பட்ட சிறுமியின் சடலத்தைப் புகைப்படம் எடுத்து அரசியல் ஆதாயத்துக்காகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை பொதுவெளியில் பகிர்வது குற்றம் என்பதால் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்க குழந்தைகள் நல ஆணையம் ட்விட்டருக்கு கோரிக்கை விடுத்தது.அதன் படி ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த நிலையில்  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ராகுல் காந்தி மீது பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. அந்த மனு இன்று மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி செப்டம்பர் 3ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.