ஒரே மேடையில் ராகுல் காந்தி, ஸ்டாலின்: சேலத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து, திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ஒரே மேடையில் இணைந்து மக்களைச் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் பிரச்சாரப் பணிகளில் அனைத்து கட்சிகளும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து, திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் தோழமை கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் இணைந்து மக்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி சேலம் சீலநாயக்கன்பட்டியில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 28ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி தமிழகத்திற்கு 3 முறை வருகை தந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். மறுபடியும் வரும் 28ம் தேதி நடைபெறும் இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 4வது முறையாக ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா, வேல்முருகன் உள்ளிட்ட அனைத்து தோழமை கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுகவின் பிரச்சார பொதுக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.