கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை… காங். எம்.பி. ராகுல் காந்தியின் பாத யாத்திரை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இன்று முதல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ராகுல் காந்தியின் பாத யாத்திரை
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 'பாரத் ஜோதா யாத்ரா' என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை தொடங்க இருக்கிறார்.
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக, மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல்காந்தியுடன் செல்ல உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் ராகுல்காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.
இதற்காக நேற்று இரவு டெல்லியிலிருந்து விமானம் மூலம் ராகுல்காந்தி சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் விடுதியில் தங்கினார்.
ராஜீவ் நினைவிடத்தில் 3 மாம்பழங்களை வைத்த ராகுல்காந்தி
இன்று காலை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சென்ற ராகுல் காந்தி சுமார் 2 நிமிடம் நின்று, பின்னர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன்பின் நினைவிடத்திற்கு எதிரே இருந்த பகுதியில் அமைதியாக அமர்ந்து தியானம் செய்தார். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி 3 மாம்பழங்களை வைத்து வழிபாடு செய்தார்.
பாத யாத்திரையை தொடங்கி வைத்த முதலமைச்சர்
ராகுல்காந்தி பாதயாத்திரை இதற்கான தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் நடந்தது.
கன்னியாகுமரியில் ராகுல் காந்தி - விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு திரும்பிய அவர், காந்தி மண்டபத்தில் தியானத்தில் ஈடுபட்டார். அவருடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
ராகுல் காந்தி தியானம் முடித்த பிறகு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் தேசிய கொடியை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதனையடுத்து, தமிழக முதலமைச்சர் கன்னியாகுமரியிலிருந்து ராகுல் காந்தியின் பாத யாத்திரையை தொடங்கி வைத்தார்.