கடவுளின் தூதரான மோடி அம்பானி,அதானிக்கு மட்டுமே வேலை செய்கிறார் - ராகுல் காந்தி காட்டம்!
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
தூதர் மோடி
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. அதில், முதல் 5 கட்டங்கள் நிறைவடைந்தது. தற்போது 6-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாளும், எஞ்சிய 7ம் கட்டம் ஜூன் 01-ம் தேதியும் நடைபெற உள்ளது.
இதற்கான வாக்கு சேகரிப்பில் அனைத்து அரசியல் கட்சிகளும், முக்கிய தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி தேர்தல் நடக்கவுள்ள இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பரப்புரையாற்றி வருகிறார்.
ராகுல் காந்தி
அந்த வகையில், வடகிழக்கு டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளரான கன்னையா குமாரை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர், "தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி 22 தொழிலதிபர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறார். அம்பானி, அதானியின் விருப்பத்தின் பேரிலேயே பிரதமர் அனைத்தையும் செய்கிறார்.
ஏழைகளுக்கு சாலைகள், மருத்துவமனை, கல்வி குறித்து கோரிக்கை வைத்தால் மோடி எதுவும் செய்வதில்லை. இந்த தேர்தல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கான தேர்தல். இந்த தேர்தல் வெற்றியின் மூலம் அரசியலமைப்பை மாற்ற விரும்புகிறது என்பதை
கடைசியாக பாஜக ஒத்துக்கொண்டுள்ளது. ஒருவேளை இந்திய அரசியலமைப்பை மாற்ற முயற்சித்தால் கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்பை பாஜக சந்திக்க வேண்டியிருக்கும்" இவ்வாறு பேசியுள்ளார்.