10 ஆண்டு ஆட்சியில் 40 ஆண்டு திண்டாட்டம் - ராகுல் காந்தி கடும் விமர்சனம்
நாட்டில் 40 ஆண்டுகளுக்கு இல்லாத வகையில் வேலையில்லை திண்டாட்டம் உண்டாகியிருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பாரத் ஜூடோ யாத்ரா
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி நாடு முழுவதும் பாரத் ஜூடோ யாத்ரா மேற்கொண்டு வருகின்றார்.
நடைப்பயணத்தின் ஆங்காங்கே பொதுக்கூட்டங்களும் நடத்தி வரும் அவர், தொடர்ந்து ஆளும் மத்திய பாஜக அரசு மீதான தனது விமர்சனத்தை அழுத்தமாகவே வைத்து வருகின்றார்.
ராகுலின் பாரத் ஜூடோ யாத்ரா தற்போது மத்திய பிரதேச மாநிலத்தை எட்டியுள்ளது. அம்மாநிலத்தின் குவாலியர் பகுதியில் நடைபயணம் மேற்கொண்டு அவர், மக்களிடம் உரையாற்றினார்.
வேலையில்லா திண்டாட்டம்...
அப்போது பேசிய அவர், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருவதாக குற்றம்சாட்டி, பாகிஸ்தானுடன் ஒப்பிடும் போது இது தற்போது இரட்டிப்பாக இருப்பதாக வேதனை தெரிவித்தார்.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி போன்ற வரிகள் சிறு குறு தொழில்களை ஒழித்துவிட்டதாக குறிப்பிட்டு, அதன் காரணமாக பல இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருவதாக வருத்தம் தெரிவித்தார்.