தமிழர்கள் யார் என்பதை பாஜக புரிந்து கொள்ளவில்லை - ராகுல் காந்தி பிரச்சாரம்
தமிழர்கள் யார் என்பதை பாஜக சரியாக புரிந்து கொள்ளவில்லை என ராகுல் காந்தி பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் ராகுல் காந்தி பிரச்சாரம்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

பொன்னேரியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், "தமிழ்நாட்டு மக்களின் மீதும் தமிழ் மொழியின்மீதும் அன்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், என் குடும்பம் தமிழ்நாட்டிலிருந்து வராவிட்டாலும் தமிழ் மண்ணை சேர்ந்தவனாகவே உணர்கிறேன். தமிழ் மக்களின் மீதான தாக்குதல் என் மீதான தாக்குதல் போன்றது.
ஒன்றிய பாஜக அரசு தமிழ் மொழியையும், வரலாற்றையும், தமிழ் கலாச்சாரத்தையும் அழிக்க நினைக்கிறார்கள். அதை ஒருபோதும் அவர்களால் செய்ய முடியாது. அவர்களால் தொடமுடியாத ஆயிரமாயிரமாண்டு கால வரலாறு தமிழர்களுக்கு உண்டு.
தமிழர்கள் யார் என்பதை பாஜக சரியாக புரிந்து கொள்ளவில்லை. பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் தமிழ்நாட்டை, தமிழ்மொழியை, தமிழ் கலாச்சாரத்தை எப்போதெல்லாம் தாக்குகிறார்களோ அப்போதெல்லாம் நான் தமிழனாகவே உணர்ந்திருக்கிறேன்.

என்ன தைரியம் இருந்தால் தமிழ் மண்ணின் மீதும், மக்கள் மீதும் தாக்குதல் இவர்கள் நடத்துகிறார்கள் எனத் தோன்றும். நான் எப்போதும் தமிழ் மக்களுடனே இருக்கிறேன்.
பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் அடிப்படையிலேயே தமிழ்நாட்டிற்கு எதிரானவர்கள். பாஜகவை பொறுத்தளவு டெல்லியிலிருந்து அவர்களின் உத்தரவை, திட்டத்தை செயல்படுத்த ஒரு முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு வேண்டும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இந்தியாவிலிருந்து நரேந்திர மோடி எப்படி சமரசம் செய்துகொள்கிறாரோ, அதுபோல தமிழ்நாட்டிலிருந்து சமரசம் செய்துகொள்ளக்கூடிய ஒரு நபர் டெல்லியில் பாஜகவிற்கு வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அதிமுக அழிந்துவிட்டது. இப்போது இருப்பது வெறும் முகமூடிதான். அது பாஜகவினுடையது.
மகளிர் இடஒதுக்கீடு என்ற பெயரில், தொகுதி மறுவரையறை மசோதாவை ஒளித்து வைத்திருந்தது ஒன்றிய பாஜக அரசு. அவர்களுடைய எண்ணம் தென்மாநிலங்களின், தமிழ்நாட்டின் பிரநிதித்துவத்தை குறைப்பதுதான். அந்த எண்ணத்தை நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முறியடித்துள்ளோம்" என பேசியுள்ளார்.