இவ்வுளவு நாள் தூங்கிட்டு இருந்தோமா ? அப்போ ரயில் பாதைகளும், சாலைகளும் வந்தது எப்படி?: மோடிக்கு ராகுல் ஆவேச கேள்வி
70 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை என்று பேசுவது மோடியின் ஆணவத்தை காட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
உத்தரகாண்ட் மாநில முதல்வர்களை பாஜ அடிக்கடி மாற்றியது. ஏனென்றால், அவர்கள் ஊழல் கறைபடிந்தவர்கள். இது ஒரு திருடனை நீக்கி விட்டு, இன்னொரு திருடனை நியமிப்பது போலாகும் எனக் கூறினார்.

மேலும், மோடி மீதோ அவருடைய அமலாக்கத் துறை, சிபிஐ போன்றவற்றை கண்டோ எனக்கு பயம் இல்லை. விவசாயிகள், காங்கிரசால்தான் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. மோடியை எதிர்க்க காங்கிரசால் மட்டுமே முடியும்
உத்தரகாண்டில் ஏழைகளுக்கான அரசு அமைய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. டெல்லியில் இருந்து ராஜா போல் ஆட்சி செய்பவர், மக்களுக்கு தேவையில்லை. சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில் இந்தியாவில் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் நடக்கவில்லை என்று பேசுவது மோடியின் ஆணவத்தை காட்டுகிறது.
70 ஆண்டுகளாக நாடு உறக்கத்தில் இருந்தது போலவும், அவர் பிரதமரான பிறகுதான் அனைவரும் துாக்கத்தில் இருந்து எழுந்தனர் என்பது போலவும் அவர் பேசியுள்ளார். அப்படி என்றால், எப்படி இவ்வளவு ரயில்வே பாதை, சாலைகள் வந்தன. இவை எல்லாம் மந்திரத்தால் முளைத்ததா? எனக் கூறினார் .