பிரதமர் மோடியுடன் நேரடியாக விவாதிக்க நான் தயார் அவர் வருவாரா? ராகுல் காந்தி சவால்!
ராகுல் காந்தி - நரேந்திர மோடி இடையே ஆன பொதுவிவாதத்துக்கு விடுத்த அழைப்புக்கு ராகுல் காந்தி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
நேரடி விவாதம்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவது வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. அதில் ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய நாட்களில் 2 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று 3-ஆம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகின்றது.
லக்னோவில் 'ராஷ்ட்ரிய சம்விதான் சம்மேளனம்' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது, வரும் மக்களவைத் தேர்தல் குறித்த பொது விவாதத்தில் பங்கேற்குமாறு ராகுல் காந்தி - நரேந்திர மோடி ஆகியோரை வலியுறுத்தி மூத்த பத்திரிகையாளர் மற்றும் 2 முன்னாள் நீதிபதிகள் எழுதிய கடிதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "எந்த மேடையிலும் பொதுப் பிரச்சனைகள் குறித்து பிரதமருடன் விவாதிக்க நான் 100 சதவீதம் தயாராக இருக்கிறேன், ஆனால் எனக்கு அவரை தெரியும் அவர் என்னுடன் 100 சதவீதம் விவாதம் செய்ய மாட்டார்" என்று காட்டமாக பேசினார்.
ராகுல் காந்தி சவால்
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர், டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி. ஷா மற்றும் ’இந்து' என்.ராம் ஆகியோர், இரு அரசியல் தலைவர்களையும் வணிகம் மற்றும் கட்சி சார்பற்ற மேடையில் பொது விவாதத்தில் பங்கேற்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.
இதற்கு இரு தலைவர்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் மற்றும் சவால்களை மட்டுமே கூறி வருகிறார்கள். ஆனால், இதுவரை அர்த்தமுள்ள பதில்கள் வந்ததில்லை. தவறான தகவல்கள் நிறைந்த இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தீர்க்கத்துடன் வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களுக்கு இதுபோன்ற விவாதம் அவசியம்’ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த நோக்கத்திற்காக, ஒரு பாரபட்சமற்ற மேடையில் ஒரு பொது விவாதத்தின் மூலம் எங்கள் அரசியல் தலைவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்பதன் மூலம் குடிமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துபோன்ற ஒரு பொது விவாதம், ஆரோக்கியமான மற்றும் துடிப்பான ஜனநாயகத்தின் உண்மையான உருவத்தை முன்வைப்பதில் ஒரு சிறந்த முன்மாதிரியை அமைக்கும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.