ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வருகை: சூடுபிடிக்கும் தேர்தல் களம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வரும் 27-ந் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் களைகட்டி இருக்கிறது. தமிழகத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அரசு விழாக்களில் பங்கேற்றனர்.
அரசு விழாவாக இருந்தாலும் அமித்ஷா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதேபோல் ராகுல் காந்தியும் தமிழகத்தில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்தார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் பிரசாரத்துக்காக தமிழகம் வருகை தந்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி தமிழகத்துக்கு மீண்டும் வருகை தருகிறார். பிப்ரவரி 27-ந் தேதி முதல் மார்ச் 1 வரை 3 நாட்கள் ராகுல் காந்தி தொடர்ச்சியாக தமிழகத்தில் பிரசாரம் செய்கிறார்.
கடந்த முறை கொங்கு மண்டலத்தில் பிரசாரம் செய்த ராகுல் இம்முறை தென்மாவட்டங்களில் பயணம் மேற்கொள்கிறார் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் சென்னை வந்த பிரதமர் மோடி பொதுமக்களை சந்திக்கவில்லை. ஆனால் ராகுல் காந்தி தமது பயணத்தின் இளைஞர்கள், பொதுமக்கள், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடுவார் என கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.