‘வீரர்கள் ஒண்ணும் இயந்திரங்கள் அல்ல’ - ஆவேசம் அடைந்த ராகுல் டிராவிட்
இந்திய அணி வீரர்களின் பணிச்சுமை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய புதிய பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான முதலாவது டி20 போட்டி ஜெய்ப்பூரில் நாளை நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு முன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக புதிதாக பொறுப்பேற்றுள்ள முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட் கூறுகையில்,
“நியூசிலாந்து அணியினரை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள்.
பல்வேறு தருணங்களில் இந்திய அணியை அவர்கள் வீழ்த்தி உள்ளனர். எனினும், நாங்கள் அவர்களை வெற்றி கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும்.”
வீரர்களின் வேலைப்பளு குறித்த கேள்விக்கு அவர் பதில் கூறுகையில், “கால்பந்து போட்டிகளை போல கிரிக்கெட்டிலும் வீரர்களின் ‘வேலைப்பளு மேலாண்மை’ முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம்.
வீரர்களின் மனநலமும் உடல் நலமுமே பிரதானம். அதனை கருத்தில் கொண்டு, பெரிய கிரிக்கெட் தொடர்களுக்காக வீரர்களை தயாராக வைக்க வேண்டும்.
வீரர்கள் ஒண்ணும் இயந்திரங்கள் அல்ல. அனைத்து வீரர்களும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். அதை கண்காணித்து வருகிறோம்.”