சூறாவளி பிரச்சாம் செய்ய இன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி

india party dmk congress
By Jon Mar 02, 2021 07:58 PM GMT
Report

தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய இன்று தமிழகம் வருகிறார் ராகுல்காந்தி. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தில் தனது 3-வது கட்ட பிரசாரத்தை இன்று தொடங்க இருக்கிறார்.

இதற்காக இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் தூத்துக்குடி வரும் அவர், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் வழக்கறிஞர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார். பின்னர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே ரோடு ஷோ மூலம் மக்களிடையே நடந்து சென்று ஆதரவு திரட்டுகிறார்.

தொடர்ந்து தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள மண்டபத்தில் உப்பளத் தொழிலாளர்களை சந்தித்து உரையாடுகிறார். பின்னர் அங்கிருந்து ஆழ்வார்திருநகரி, சாத்தான்குளம் பகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

நாளை காலை 10 மணிக்கு பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாட இருக்கிறார். பின்னர் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். அங்கிருந்து திறந்த வேனில் சென்று மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.

நெல்லை டவுன் காந்தி சிலை முன்பு மக்களிடையே பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். பின்னர் நெல்லையில் இருந்து கார் மூலம் ஆலங்குளம், சுரண்டை பகுதிகளுக்குச் சென்று பீடி தொழிலாளர்களை சந்தித்து பேசுகிறார். இரவில் குற்றாலத்தில் தங்குகிறார். திங்கட்கிழமை காலையில் ராகுல்காந்தி குற்றாலத்தில் இருந்து கடையத்துக்கு சென்று ரோடு ஷோ முறையில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து அம்பை, சேரன்மாதேவி, வள்ளியூரில் பிரசாரம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி பின்னர் நாகர்கோவிலுக்கு செல்ல இருக்கிறார். ராகுல்காந்தி வருகையையொட்டி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் காங்கிரசார் வரவேற்பு பேனர்கள், கட்சிக்கொடிகள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் அமைத்துள்ளனர். ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுளளது.