காங்கிரஸ் மூத்த தலைவர் இறுதி ஊர்வலத்தில் உடலை சுமந்து சென்ற ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மறைவில் உடலை ராகுல் காந்தி சுமந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் கேப்டன் சதீஷ் சர்மா, கோவாவில் வசித்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் இறுதி சடங்கிற்காக டெல்லி எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவரது இறுதி மரியாதையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற ராகுல் காந்தி சதீஷ் சர்மாவின் உடலைத் தூக்கிச் சென்று அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் சர்மாவின் உடலை ராகுல்காந்தி தோளில் சுமந்து சென்ற சம்பவம் நிர்வாகிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.