ரயில் விபத்துக்கு மோடி அரசு தான் காரணம் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
ரயில் விபத்துக்கு மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ரயில் விபத்து
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் சரக்கு ரயில், சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் பனிஷ்தேவா பகுதியில் நின்று கொண்டிருந்த போது சரக்கு ரயில் மோதிஉள்ளது. தகவல் அறிந்த பேரிடர் மீட்புக்குழுவினர், ரயில் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர்.
ரயில் விபத்தில் பல பெட்டிகள் தடம்புரண்டன. சரக்கு ரயில் மோதியதில், பயணிகள் ரயிலின் கடைசி 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்திருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
ராகுல் காந்தி
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், 'தவறான நிர்வாகம் மற்றும் அலட்சியத்தின் விளைவால் ரெயில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த யதார்த்தத்துக்கு இந்த விபத்து மற்றொரு உதாரணம்' என குறிப்பிட்டு உள்ளார்.
ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக இந்த அப்பட்டமான அலட்சியம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் எனக்கூறியுள்ள ராகுல் காந்தி, இந்த விபத்துகளுக்கு மோடி அரசை பொறுப்பேற்கச் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.