நம்ம கெட்ட நேரம்..ஆளுநரை என்னதான் செய்ய முடியும்..? அமைச்சர் ரகுபதி
இன்று திருவள்ளுவர் திருநாளை கொண்டாடுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவிக்கப்பட்டிருப்பது சர்ச்சையாக உள்ளது.
ஏற்கனவே, கடந்த ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தின் போது, காவி நிற உடையில் திருவள்ளுவரை சித்தரித்த ஆளுநர் மாளிகையின் பதிவு பெரும் விமர்சனத்தை பெற்றது.
தற்போது மீண்டும், அதே போல ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர், வைகாசி அனுஷம் தினத்தில் பிறந்ததாக கருதப்படுகிறது. இன்று அந்நாள் அனுஷ்டிக்க படும் நிலையில், இன்று அவரின் திருநாளை கொண்டாடுவதாக ஆளுநர் மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது.
ஆளுநர் மாளிகையின் திருவள்ளுவர் தின அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இருப்பதற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது சர்ச்சையை கிளப்பியது என குறிப்பிட்டு, மீண்டும் மீண்டும் ஆளுநர் அதே சர்ச்சையை கிளப்பினால் என்னதான் செய்ய முடியும் என்றார்.
மேலும், வாதத்துக்கு மருந்து உண்டு, பிடிவாதத்துக்கு மருந்து கிடையாது என தெரிவித்து நமக்கு கெட்ட நேரம் இதுபோன்ற ஆளுநர் நமக்கு வாய்த்துள்ளார் என சாடினார்.