உதகைக்கு புறப்பட்ட ராகுல் காந்தி...கோலாகலமாக வரவேற்ற தொண்டர்கள்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று வயநாடு செல்லும் வழியில் உதகை செல்வதற்காக தற்போது கோவை வந்தடைந்துள்ளார்.
வயநாடு பயணம்
மீண்டும் எம்.பியாகியுள்ள ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாட்டிற்கு இன்று செல்லவுள்ளார். ராகுல் காந்தியின் தகுதி நீக்கமும், அவர் மீண்டும் எம்.பி பதவியை பெற்றதும் நாடெங்கும் முக்கிய செய்தியாக பரவிய நிலையில், தற்போது அவர் இந்த பரபரப்புக்கு மத்தியில் வயநாடு செல்லவுள்ளார்.
உதகை விசிட்
வயநாடு செல்லவிருக்கும் ராகுல் காந்தி, வழியில் ஊட்டி செல்லவிருக்கிறார். அதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்து, கார் மூலம் ஊட்டி செல்லவுள்ளார். அதற்காக தற்போது கோவை வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர்.
ஊட்டி செல்லும் அவர், அங்கு விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவை சந்திக்கவுள்ளார். பின்னர் மத்திய உணவிற்கு பிறகு, கூடலூர் வழியில் முத்தநாடுமந்து பகுதியில் பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.