திருச்சி கிழக்கு தேர்தலில் போட்டியா? பரபரப்பை கிளப்பிய ராகவா லாரன்ஸின் அறிவிப்பு
தமிழக அரசியல் களம் தற்போது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், விதிமுறைகளின்படி திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
அவரது பதிவில், “அனைவருக்கும் வணக்கம். நான் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து விளக்கம் கேட்டு ஊடக நண்பர்கள் தொடர்ந்து என்னைத் தொடர்புகொண்டு வருகின்றனர். இந்த ஊகங்கள் அதிகரித்து வருவதால், அதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறேன்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. என் தாயின் ஆசீர்வாதத்துடன், என் வாழ்க்கை தொடர்பான ஒரு முக்கிய முடிவை வரும் 11ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அறிவிக்க உள்ளேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
ராகவா லாரன்ஸின் இந்த அறிவிப்பு அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அரசியலில் நேரடியாக களமிறங்கப் போகிறாரா, அல்லது தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளாரா என்ற கேள்விகள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Hi everyone, News about me contesting in Trichy East election has been circulating across various media platforms.
— Raghava Lawrence (@offl_Lawrence) June 7, 2026
All my Media friends have been reaching out to me over phone and requesting to meet me asking for clarification. Since the speculation has grown to a point where I… pic.twitter.com/68ZyN6P0l9