திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் பதிவு
வருகிற 11ம் தேதி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக பிரபல நடன இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய் அத்தொகுதியில் ராஜினாமா செய்துள்ளதாக காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகவா லாரன்ஸ் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய எக்ஸ் தள பதிவில், அனைவருக்கும் வணக்கம், திருச்சி கிழக்கு தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
பலரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர், இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கருதி இதனை பகிர்கிறேன்.
தற்போது நான் பென்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக பணியாற்றி வருகிறேன், இந்த பணிகள் வருகிற 10ம் தேதி நிறைவடைகின்றன.
என் தாயாரின் ஆசியுடன் எனது வாழ்க்கை தொடர்பான ஒரு முக்கிய முடிவை வரும் 11ம் தேதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு அறிவிக்கவுள்ளேன் என தெரிவித்துள்ளார்.