கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று வரலாறு படைத்தார் ரபேல் நடால் - கொண்டாடும் ரசிகர்கள்

australianopentennis rafaelnadal
By Petchi Avudaiappan 1 வருடம் முன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார். 

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்த டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லே பார்டி சாம்பியன் பட்டம் வென்றார்.

இதனைத் தொடர்ந்து நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2 ஆம் நிலை வீரரான டேனில் மெட்வெடேவ்(ரஷியா),  ஸ்பெயினின் ரபேல் நடாலை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது செட்டை மெட்வடேவ் கைப்பற்றிய நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது செட்களை நடால் வென்றார். 5வது செட்டை  நடால் கைப்பற்ற  2-6, 6-7(5), 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் அவர் போட்டியில் வென்றார். 

5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இப்போட்டியில் டென்னிஸ் தரவரிசையில் 5 ஆம் நிலை வீரராக உள்ள ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 35 வயதான ரபேல் நடால் 21வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.