திமுக மேடையில் ராதிகா சரத்குமார் - கவனம் ஈர்க்கும் பேச்சு!
நடிகை ராதிகா சரத்குமார் திமுக மேடையில் பேசிய பேச்சுக்கள் வைரலாகி வருகிறது.
ராதிகா சரத்குமார்
திமுக சார்பில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், நடிகை ராதிகா சரத்குமார் முன்னிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மகளிர் தின விழா இன்று நடைபெற்றது. அப்போது பேசிய ராதிகா,
"இது அரசியல் விழாவாக இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் பெண்களுக்கான விழாவாக ஒருங்கிணைத்து இருக்கிறார்கள். இதில் நான் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் செல்ல மகளாக பங்கேற்று இருக்கிறேன். அவரிடம் நான் பயிற்சி பெற்றது இப்போதும் எனக்கு நினைவுக்கு வருகிறது.
கலைஞரின் செல்ல மகள்
நான் இன்னும் அவரின் குடும்பத்தில் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சிகொள்கிறேன். அதுபோல் என் அப்பா எம்ஆர் ராதா மற்றும் கலைஞர் கருணாநிதி இருவரின் நட்பு அற்புதமானது. பொதுவாக, இந்த ஆண்களை கெடுப்பதே பெண்கள்தான். ஆண்மகனை தயவுசெய்து கெடுத்து விடாதீர்கள்.
ரொம்ப விழுந்து விழுந்து அவர்களை கவனிப்பதுதான் பிரச்சனையே. ஏன், அவங்களே சாப்பாடு போட்டுக்கிட்டு சாப்பிட்டால்தான் என்னவாம்? ஒன்னும் ஆகாது. பசித்தால் அவர்களே சாப்பாடு போட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். எல்லாருமே நல்லாதான் இருப்பாங்க.. ஆனால் நீங்க அவங்களை கெடுத்து விடாதீர்கள்.
இங்கேயிருக்கும் சில ஆண்கள் என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். ராதிகாவை வேற எதுக்கோ கூப்பிட்டால், சோறு போட வேண்டாம் என்று சொல்கிறாரே என்று நினைக்கிறார்கள். அப்படி நான் சொல்லவில்லை. எல்லாரையும் கவனிக்க வேண்டும்.
ஆனால், அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்தானே. அதுபோலத்தான், ஆண்களை அளவுக்கு மீறி நாம் பார்த்துக் கொண்டால், அது நமக்கே விஷமாகிவிடும் என்பதையும் பெண்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்" என பேசினார்.