சாக்கடை நீரை குடிக்கும் மாடுகள்; இந்த மாடுகளின் பாலை குடிக்காதீர்கள் - மாநகராட்சி ஆணையர் அறிவுரை!

Tamil nadu Greater Chennai Corporation
By Jiyath Aug 14, 2023 10:57 AM GMT
Report

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

சிறுமியை தாக்கிய மாடு

அண்மையில் சென்னை அரும்பாக்கம் பகுதியில் மாடு ஒன்று தெருவில் நடந்து சென்ற பள்ளி சிறுமியை கொடூரமாக முட்டி தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சாக்கடை நீரை குடிக்கும் மாடுகள்; இந்த மாடுகளின் பாலை குடிக்காதீர்கள் - மாநகராட்சி ஆணையர் அறிவுரை! | Radhakrishnan Warned About Cows Roaming In Sewers

மாடுகளை தெருவில் சுற்றவிடுவதால்தான் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் நடக்கிறது. இதனால் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சிறுமியை முட்டிய மட்டை பிடித்து காப்பகத்தில் அடைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அறிவுரை

இந்நிலையில் இன்று சென்னை மாநகராட்சி சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கழிவு நீரில் இருக்கும் ஒரு மாட்டின் முன் நின்று பேசுகிறார். அவர் பேசுகையில் 'இங்கு திரியக்கூடிய மாடுகளைப் பாருங்க. இதுபோன்று கானால் உள்ளே நின்று கொண்டு கழிவுநீரை குடிக்கிறது.

இந்த மாடுகளின் பாலை ஹோட்டல்களில் வாங்குகின்றனர். பலர், தாங்கள் கறந்த பசும் பால் வாங்குகிறோம் என நினைத்து இந்த மாடுகளின் பாலை வாங்குகின்றனர். நாம் மாடுகளுக்கு எதிராக இல்லை. ஆனால், உரிமையாளர்கள் மாடுகளை சரிவரப் பராமரிக்க வேண்டும். சும்மா விதண்டாவாதம் செய்யக்கூடாது. ஒவ்வொரு மாட்டுக்கும் தேவையான தீனி கொடுக்க வேண்டும், தங்குமிடம் அமைக்க வேண்டும், அப்படியே பொறுப்பின்றி விடலாமா? குப்பை போடும்போது பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்.

வீட்டில் இருக்கும் குப்பைகள் அனைத்தையும் தெருக்களில் போட்டுவிடுகிறீர்கள். அப்படி செய்யாதீர்கள், நீங்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். குப்பைகளை சரியான முறையில் அப்புறப்படுத்துங்கள். உங்கள் வரிப்பணத்தில் தான் தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்து, இயந்திரங்களைப் பயன்படுத்தி எடுக்கப்படுகிறது. நீங்கள் செய்யும் தவறான செயலால் உங்கள் வரிப்பணம் தான் வீணாகிறது என்பதை உணர வேண்டும்.

கழிவு தண்ணீரில் சுற்றித் திரியும் மாடுகளில் இருந்து பெறக்கூடிய பாலை பயன்படுத்த வேண்டாம் என்றும், அதன் மூலம் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அந்த வீடியோவில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.