பொன்னாருக்கு போட்டியாக பிரியங்கா காந்தி? சூடு பிடிக்கும் தேர்தல்களம்
கன்னியாகுமரி தொகுதிக்கு கடந்த 2014ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வசந்தகுமாரை தோற்கடித்து வெற்றி பெற்றார் பொன்.ராதாகிருஷ்ணன். ஆனால், 2019ல் நடந்த நடாளுமன்ற தேர்தலில் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை தோற்கடித்து வெற்றி பெற்றார் வசந்தகுமார்.
வசந்தகுமாரின் மரணத்திற்கு பிறகு கன்னியாகுமரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் வந்துள்ளது. இதனால், பாஜக சார்பில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணனே களமிறங்குவார் என கூறப்படுகிறது. அதே போல், திமுக கூட்டணியிலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலை காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கும் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் சார்பில், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், சென்னை சத்யமூர்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்துள்ளார். ஆனால், கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்.
ராகுல்காந்தி வயநாடு தொகுதி எம்.பியாக இருப்பது போல், பிரியங்கா காந்தி கன்னியாகுமரி தொகுதி எம்.பியாக வரவேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் விரும்புவதாக கூறப்படுகிறது. அதே சமயம் கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் தரப்புக்கு செல்வாக்கும் அதிகம் இருப்பதால் காங்கிரஸ் யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
கன்னியாகுமரி தொகுதிக்கு வரும் மார்ச் 12ம் தேதி தொடங்கி மார்ச் 19ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிகிறது. அதனால் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.