கொரோனா பரவாமல் கட்டுப்படுத்த இது தான் ஒரே வழி.! - ராதாகிருஷ்ணன் பதில்
பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கும் நபர்கள் முககவசம் அணிவதை அரசியல் கட்சி பிரமுகர்கள் கட்டாயப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை சார்பாக நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் பிரச்சாரம், அரசியல் கட்சிகள் கூட்டத்தில் சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும் சென்னையில் 3% சதவீதத்திலிருந்து கொரோனா பாதிப்பு தற்போது 4.7% சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே போன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்பத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் முககவசம் போன்றவற்றை அணிந்து ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே பாதிப்பை குறைக்க முடியும்.

மேலும் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட கொரோனா தடை செய்யப்பட்ட பகுதிகள் தற்போது உள்ளது. ஒரு நபர் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தால் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு எதுவும் இல்லை.
80% நபர்கள் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் பிரச்சார நேரத்தில் கூட்டமாக அமர்ந்து உணவு உண்ணுவதை தவிர்க்க வேண்டும்” என்றார்