‘தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு’ - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
சென்னை ஐஐடியில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதில் 3 பேருக்கு அறிகுறி இல்லை என்றும் 7 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பரிசோதனைகளை அதிகரிக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கவும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஐ.ஐ.டியில் நேரில் சென்று ஆய்வு நடத்திய பின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “ சென்னை ஐ.ஐ.டி.யில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது வரை 365 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 25 ஆயிரமாக உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொது இடங்களுக்கு செல்லும்போது பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை அவசியம் பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. முகக்கவசம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால், நமக்கும் டெல்லியின் நிலை ஏற்படும்.
டெல்லி, மராட்டியம்,கேரளா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாக உள்ளது. தற்போதைய தொற்று அதிகரிப்பை கொரோனா 4ஆம் அலையின் தொடக்கம் என கூற முடியாது. பல இடங்களில் சானிடைசர் வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பது கவலைக்குரியதாக உள்ளது.
முகக்கவசம் அணிய தேவையில்லை என சில மாநிலங்கள் கூறினாலும் தமிழக அரசு கூறவில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, கவனக்குறைவு ஆகியவையே தொற்று பரவுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.” என தெரிவித்தார்.